நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதியில் சாதாரணமாக நடமாடி வருகிறது.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் போஸ்ட், வசம்பள்ளம், போகிதெரு கரடிபள்ளம், ஜெயந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரத்தில் வரும் சிறுத்தை, அப்பகுதிகளில் உள்ள கோழி, ஆடு, மாடு, நாய் போன்றவற்றை கடித்து கொன்றுவிடுகிறது. இதன் காரணமாக வளர்ப்பு பிராணிகளை இரவு நேரங்களில் கூண்டில் அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பதிவாகியுள்ளது. எனவே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வனச்சாலையில் புலி நடமாட்டம் - வனத்துறையினர் தீவிர ரோந்து