நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1374 மில்லி மீட்டர் மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இன்றும் பைக்காரா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 அடி நீளத்திற்கு பெரிய அளவிலான விரிசல் உருவாகி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக சாலையின் ஒரு பகுதி முழுவதும் பள்ளத்தில் சரிந்துள்ளது. நிலச்சரிவின்போது அவ்வழியாக வாகனம் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அச்சாலையில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரிசல் ஏற்பட்ட பகுதியில், திடமாக உள்ள வலதுபக்க சாலையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட சாலையை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.