தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி, கார் ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும், அங்கு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து கொடநாடு வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது. இன்றைய விசாரணையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ், மனோஜ்சாமி, உதயகுமார், ஜம்சீர்அலி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 8 பேர் ஆஜர்படுத்தபட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சதீசன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திபு என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஐந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு: 8 பேர் ஆஜர்!