நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் சேலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
கனகராஜ் உயிரிழந்த 24 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சயானும் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது மகளும், மனைவியும் உயிரிழந்தனர்.
மீண்டும் விசாரணை
இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி வேகமெடுத்துள்ளது. இதனால் வழக்கில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் எழுந்துள்ளது.
இந்த வழக்கில் தற்போது காவல்துறை மூலம் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜின் மனைவி, மைத்துனர், வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தவர்களிடம் விசாரனை நடைபெற்று முடிந்தது.
இன்று (செப்.13) வழக்கில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
முன்னதாக மனோஜின் பிணையில் தளர்வுகள் கேட்டு அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்ஜய் பாபா நாளை (செப்.14) விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - யாரும் தப்ப முடியாது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்