நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரா பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழையுடன் காற்றும் வீசி வருவதால் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் உதகை சுற்றுலா தலங்களில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சாரல் மழை, கடுங்குளிருடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதுபோன்ற கடுங்குளிர், சாரல் மழையுடன் சுற்றுலா தலங்களை ரசித்து வருவது மிகுந்த மகிழச்சியாக உள்ளது என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 154 மி.மீ மழை பெய்துள்ளது.