நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் எல்லையில் சுடுகாடு அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த சுடுகாடு வழியாக மஞ்சனக்கொரையைச் சேர்ந்த கீர்த்தி, சகாயமேரி ஆகியோர் சென்றபோது ஒரு புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இருவரும் புதர் அருகே சென்று பார்த்தபோது ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியில் நாய்கள் சுற்றித்திரிந்ததை அடுத்து, குழந்தையை மீட்ட பெண்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் சைல்டு லைன் அமைப்பினருக்குத் தகவல் தெரிவித்து குழந்தையை உதகை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை புதரில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பிறந்து ஒருமணி நேரமேயான பச்சிளம் குழந்தையை சுடுகாட்டில் உள்ள புதரில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.