நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால், மலைப்பாதையில் லேசான மண் சரிவும் மரங்கள் விழுந்தும் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று குன்னூர் மரப்பாலம் பகுதியில், ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்ததால், மேட்டுபாளையம்-குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறை, பொதுமக்களின் உதவியோடு மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மலைப்பாதையில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போன்று கோத்தகிரி சாலையில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.