நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக பெய்துவரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீரானது சாலைகளில் ஆறுபோல காட்சியளிப்பதுடன் பல குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்றதால், மக்கள் எங்கு செல்வது என்று செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
மேலும், பாலாடா, முத்தோரை, காக்காதோப்பு, இத்தலார், பேலிதளா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதேபோல் உதகையில் கனமழையினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், பாதுகாப்புக் கருதி குந்தா, கிளன்மார்கன் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையினால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.