நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக பலத்த மழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உதகை, கூடலுார் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும், சில இடங்களில் குடியிருப்பு வீடுகளிலும், இருசக்கர வாகனங்களின்மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதோடு தொடர் மழையினால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், உதகை, குந்தா, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நான்காவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக பெய்துவரும் கனமழையினால் நீலகிரியில் கடுங்குளிர் நிலவுவருகிறது. தமிழ்நாட்டில் மழைப்பதிவு அதிகபட்சமாக நீலகிரியில் பதிவாகியுள்ளது. இதில் அவலாஞ்சியில் 80.2 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டு உதகை அருகே உள்ள கேத்தியில் 80 செ.மீட்டர் மழைப்பதிவே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.