நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்றுவட்டாராப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக உதகை - மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.
குறிப்பாக வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி குத்துமதிப்பில் ஆமை வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக சில வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தபட்டன. இதனிடையே பனி மூட்டம் காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது. உதகை- மேட்டுபாளையம் செல்லும் சாலை, உதகை – கோத்தகிரி செல்லும் சாலை முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டு சிம்லா போல காட்சியளிக்கிறது. இது ரசிக்கும்படியாக இருந்தாலும் வாகன ஓட்டிகளுக்கு சவாலாக உள்ளது.
மலை பாதையில் பனி மூட்டம் குறைந்து, மலை பாதையில் விழுந்துள்ள ராட்சத பாறைகள் மற்றும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை அகற்றிய பின்பு தான் இயல்பு நிலை திரும்பும் என வாகன ஒட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விடிய விடிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீர்