மேட்டுப்பாளையம் பணிமனைச் சேர்ந்த அரசுப்பேருந்து ஒன்று ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு 34 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (54) ஓட்டிச் சென்ற இந்தப் பேருந்து குன்னுார் - ஊட்டி மலைப்பாதை பெரிய பிக்கெட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பேருந்திற்கு வழிவிட முயன்றபோது பேருந்து, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழும்போது மரம் ஒன்று பேருந்து தடுத்தி நிறுத்தியுள்ளது. பேருந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை அறிந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற வாகனஒட்டிகள் பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினர்.
இதில், பயணம் செய்த 34 பயணிகள் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒட்டுநர் வேலுச்சாமிக்கு மட்டும் காயம் ஏற்பட்டதால் அவர், ஊட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரம் மட்டும் தடுக்காவிட்டால் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தின் காரணமாக குன்னுார் ஊட்டி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அருவங்காடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.