நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதில் சிக்கி உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உதகை அருகே உள்ள நடுவட்டம் பகுதியில் மழையால் வீடு இடிந்து உயிரிழந்த அமுதா அவரது மகள் பாவனா ஆகியோரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. மழையில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் ஆறு பேர் உயிரிழந்தனர். இன்றைக்கு உயிரிழந்த குடும்பத்தில் ஐந்து பேருக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்கப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் 49 முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. அதில், 5 ஆயிரத்து 350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் முகாமில் தங்கியுள்ளவர்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு குடிசை மாற்று மூலமாக வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அதிகளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.