நீலகிரி: கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள், நான்கு மனிதர்களை வேட்டையாடிக் கொன்ற ஆட்கொல்லிப் புலியை 11ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்.05) சிங்காரா வனப்பகுதியிலுள்ள மூங்கில் காட்டிற்குள் புலி பதுங்கியிருப்பதைக் கண்ட வன அலுவலர்கள், அப்பகுதியைச் சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தப் புலியைப் பிடிக்க இரண்டு மாடுகளையும், ஒரு கன்று குட்டியையும் வனத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதனுடன் சத்தியமங்கலத்திலிருந்து வந்துள்ள டைகர் என்ற மோப்ப நாயும் கொண்டு சென்று புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலியை பிடிக்கும் முயற்சியில் வன அலுவலர்கள்
மேலும், புலி பதுங்கியுள்ள இடத்தைச் சுற்றிலும் மரத்தின் மீது பரண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மசினகுடி - சிங்காரா சாலையில் 30 மீட்டர் இடைவெளியில், ஒவ்வொரு மரத்திலும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் மரத்தின் மீது அமர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தலைமை வன உயிரின பாதுகாவலர், முதுமலை கள இயக்குநர், மாவட்ட வன அலுவலர், மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர்கள் ஆகியோர் வனத்திற்குள் சென்றுள்ளனர்.
மேலும், ட்ரோன் மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். புலி பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்த வன அலுவலர்கள் அதனைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரி புலியை கொல்ல வேண்டாம்- உயர் நீதிமன்றம்