நீலகிரி: கேரளா, கர்நாடக மாநில எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இந்நிலையில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வனப் பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கியது.
அந்த மின்வேலியில் மின்சார இணைப்பு இருந்ததால், அந்த மின்சாரம் தாக்கியதில் மயங்கிய யானை கீழே விழுந்தது. அதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலியில் மின்சார இணைப்பைத் துண்டித்தார். பின்னர் மயங்கிய அந்த யானையின் நிலை பற்றி உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அந்த தகவலைத் தொடர்ந்து, விரைந்து வந்த வனத்துறையினர், அதன் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர்.
ஆனால் அந்த காட்டு யானையால் எழுந்து நிற்க முடியாமல் தவித்தது. பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி எழுந்து நிற்க வைத்தனர். பின்னர் ஓரளவிற்குக் குணமடைந்த அந்த யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய அந்த யானையைத் துரிதமாகச் செயல்பட்டுக் காப்பாற்றிய அந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்!