நீலகிரி: முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி யானை வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று(அக்.14) உயிரிழந்தது. யானையை அடக்கம் செய்யும் பணிகள் இன்று நடந்தது. முன்னதாக உயிரிழந்த யானையை பராமரித்து வந்த பாகன், கிராமத்தினர் மலர் தூவி யானையை கட்டிப்பிடித்து அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.
மூர்த்தி என்ற மக்னா யானை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் 1998 முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை தனது 58 வயதை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதற்கு ரிட்டயர்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆட்கொள்ளி யானை டூ கும்கி: இந்த யானை ஒரு ஆட்கொள்ளி யானையாக கேரளாவில் 1998 வருடத்திற்கு முன்பு இருந்திருக்கிறது. அப்போது 22 பேரை யானை கொன்றதால் கேரளா சீஃப் ஓயில்டு லைப் வார்டன் அந்த யானையை சுட்டு பிடிப்பதற்கு ஆணையிட்டு இருந்தார்.
ஆனால் அதற்குள் அந்த யானை தமிழ்நாட்டின் கூடலூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்து இரண்டு நபர்களை கொன்றுவிட்டது. இதனையடுத்து தமிழ்நாடு ஒயில்டு லைப் வார்டன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு ஆணை வழங்கியிருந்தார்.
அதன் அடிப்படையில் அப்பொழுது தெப்பக்காடு யானை முகாமில் பணிபுரிந்து வந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற கால்நடை மருத்துவர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வாச்சிகொலி என்ற இடத்தில் பிடித்தார். அப்போது அந்த யானையின் உடம்பு முழுவதும் அதிக காயங்கள் இருந்தது.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அந்த யானையின் அனைத்து காயங்களுக்கும் முறையாக மருத்துவம் செய்து யானையை குணப்படுத்தினார். அவர் அந்த யானையை பிடித்து குணப்படுத்தியதன் அடிப்படையில் அந்த யானைக்கு மூர்த்தி என்றும் பெயரிடப்பட்டது.மூர்க்கத்தனமாக இருந்த அந்த யானை முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு வந்து பழக்கப்படுத்திய பின்பு சாதுவாக மாறியது. பல வகையான பணிகளுக்கு யானை ஒத்துழைத்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக வயது முதிர்வின் காரணமாக அந்த யானையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்ததுள்ளது. கால்நடை மருத்துவர்கள் யானைக்கு போதிய சிகிச்சை அளித்தும் வயது முதிர்வு காரணமாக மூர்த்தி யானை இறந்ததுவிட்டது.
மூர்த்தி யானை இறுதி சடங்கு: குழந்தைப் போல் பழகக்கூடிய மூர்த்தி யானையின் இறப்பால் ஒட்டுமொத்த யானை பாகன்கள் மற்றும் பகுதியில் வசிக்கக்கூடிய பழங்குடியின கிராம மக்கள் மற்றும் யானையை பராமரித்து வந்த காவடிகளுக்கு மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 13 வருடங்களாக மூர்த்தி யானையை பராமரித்து வந்த பாகன் கிரிமாறன், யானையை கட்டித் தழுவி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது.
அரசு மரியாதையுடன் அடக்கம்: இறந்த மூர்த்தி யானையின் நல்லடக்கம் செய்யும் முன்பு அரசு மரியாதையுடன் வனத்துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்பு கும்கி யானைகள் தும்பிக்கையை தூக்கி பிளறி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் மூர்த்தி யானைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.