நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள ஆடு-மாடு வதைக் கூடத்தில் பணிபுரிந்து வந்தவர் கருப்பண்ணன்(50). குன்னூரில் தொடர்ந்து மழை பெய்ததால் அப்பகுதியில் இருந்த மின்சாரக் கம்பிகள் அறுந்து நடைபாதையில் விழுந்துள்ளது.
இந்த நிலையில், கருப்பண்ணன் தான் பணிக்கு செல்லும் வழியில் மின்சாரக் கம்பிகள் அறுந்து கிடப்பதை அறியாமல் அதனை மிதித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அலுவலர்கள் கருப்பண்ணனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.