நீலகிரி: தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் தீயணைப்பு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் குன்னூர் தீயணைப்பு நிலையம் வந்த அவருக்கு தீயணைப்பு பொறுப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள மீட்பு கருவிகளை ஆய்வு செய்தார். அணிவகுத்து நின்ற தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்து அங்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் ஏறுமாறு உத்தரவிட்டார். உடனடியாக தீயணைப்பு வீரர் அந்தக் கயிற்றின் உச்சி வரை விரைவாக சென்றார். வீரரின் திறமையை பார்த்து டிஜிபி பாராட்டுகள் தெரிவித்தார்.
இதையடுத்து, டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், “நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே இது போன்ற காலங்களில் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தீயணைப்பு துறையில் காலி இடங்களில் புதிதாக ஆள்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களை உற்சாகப்படுத்திய சைலேந்திர பாபு