கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடபட்டுள்ளன. இதனால் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு அரசு கடந்த 1ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. முக்கியமாக இ பாஸ் முறை ரத்து செய்யபட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது.
இந்தநிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் 9ஆம் தேதி முதல் திறக்கபடும். இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று வரும்போது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து பயணம் செய்யலாம்.
ஆனால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர கட்டாயம் இ-பாஸ் தேவை. சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற tnepass முறையில் தனி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட எல்லையில் கரோனா பரிசோதனை செய்யப்படும்.
பூங்காக்கள் திறக்கப்பட்டால் கரோனா கட்டுபாட்டு விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவு சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். பூங்காகளை காண எவ்வாளவு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதுமலை, பைக்காரா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட மற்ற சுற்றுலா தலங்கள் தற்போதைக்கு திறக்கபடமாட்டாது.
கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது முறைகேடாக பணம் சென்றுள்ள வங்கி கணக்குகள் முடக்கபட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: குட்கா விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு புதிய நோட்டீஸ்?