நீலகிரி: பருவமழைக்காலம் தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சில இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவு ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று (நவ.08) இரவு பெய்த கனமழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 12வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் மரம் விழுந்தது. இதனால் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதனை அடுத்து, தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், மழைக்காலங்களில் வாகனங்களை கவனமுடன் கையாள வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் பாறைகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும், மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று விளையாடக் கூடாது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
கடந்த சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக, உதகை மலை ரயில் பாதையில் உள்ள கல்லாறு மற்றும் ஆர்டர்லி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரு நாள் மலை ரயில் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் குன்னூருக்கு 10:20 மணிக்கு வர வேண்டிய ரயில், நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்தடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு பெய்த பலத்த மழையால், கல்லார் மற்றும் ஆடர்லி இடையேயான ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்தது. இதனால் மீண்டும் இன்று மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் தொடரும் கனமழை.. ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!