நீலகிரி: நேற்று (நவ. 3) இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம், குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக மலை ரயில் போக்குவரத்தானது இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உலக பாரம்பரிய சின்னமான, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலானது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இம்மலை ரயில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஆனால் மழை காலங்களில் இந்த பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் இந்த ரயில் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது. நேற்றிரவு (நவ. 4) பெய்த கனமழை காரணமாக மலை ரயில் கடந்து செல்லும் மலைப் பாதையான கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும் சாய்ந்தன.
இதனால் வழக்கம் போல் சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு புறப்பட வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணியில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மலை ரயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை (நவ. 5) வழக்கம் போல் மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.