ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசனாகும். அந்த நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க 10 லட்சத்திற்கும் மேற்பட சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு கோடை சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 230 ரகங்களைக் கொண்டு, ஐந்து லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு, பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.
மேலும் 40 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் வெளி நாட்டு மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், கோடை சீசனில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் மலர்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி, படகுப் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செலிவியர், கிராம செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு வேலை பளுவிலிருந்து விடுபட்டு மன மகிழ்ச்சி அடையும் நோக்கில், முதல் நாளான இன்று (மே 11) மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களை மாவட்ட நிர்வாகம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பார்வையிட அனுமதியளித்தது. இதில் மலர்க் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கட்டுள்ள 40 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களையும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ஐந்து லட்சம் மலர்ச் செடிகளையும் கண்டு ரசித்தனர்.
மேலும் கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ மலர் அலங்காரங்களைக் கண்டு மன மகிழ்ச்சி அடைந்தனர். கரோனா பணியில் தீவிரமாக மன அழுத்தத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு, இந்த மலர்களின் கண்காட்சி மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாக இருந்தது.