உலக மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா மகளிர் ஆட்டோவில் வந்து கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மகளிர் குழுக்கள் சார்பாக உணவு கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண்கள் புகார் தெரிவிக்க, அவள் புகார் பெட்டித் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு கேடையம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பெண்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் குரும்பர் இன பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமும், படுகர் இன மக்களின் பாடலுக்கு நடனம், நாடகம், குழந்தைகள் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறும்பர் இனத்தவர் பாரம்பரிய உடையணிந்து ஆடிய நடனத்தை தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
குறிப்பாக படுகர் இன பாடலுக்கு பெண்கள் நடனமாடிய போது, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் அவர்களுடன் இணைந்து நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.