நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டெருமைகள் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று நோய்வாய்ப்பட்டு ராணுவ மையப்பகுதியில் நடக்க இயலாமல் படுத்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆபத்தை உணராமல் காட்டெருமையின் அருகே சென்று செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனால் காட்டெருமை அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி பெறும் வீரர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் அவ்வழியாக சென்று வர அச்சமடைந்துள்ளனர். எனவே உடனடியாக வனத்துறையினர், காட்டெருமையை மீட்டு சிகிச்சையளித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இப்பகுதியில், நான்குக்கும் மேற்ப்பட்ட காட்டெருமைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இப்பகுதியில் விவசாய நிலங்களை காட்டெருமைகள் சேதப்படுத்துவதால் இதை தடுப்பதற்கு விவசாயிகள் வெடி வைத்ததில் மூன்று காட்டெருமைகள் உயிரிழந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.