நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பண்டிகையை முன்னிட்டு ரசாயன கலவையால் செய்யபடும் விநாயகர் சிலைகள் வைக்கபடுகிறது. பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும்போது ரசாயனத்தால் தண்ணீர் மாசுபடுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உதகையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய களிமண்ணை கொண்டு ஏராளமான விநாயகர் சிலைகளை உருவாக்கி பள்ளியில் காட்சிக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சிறிது முதல் பெரியது வரை என பல விதமான விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளனர். இயற்கையை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்களிடையே இந்த பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.