நீலகிரி: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதலான விசாரணை காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கொலை, கொள்ளை வழக்கிற்கு மூலக்காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கையும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரையும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், கோடநாடு கொள்ளை சதித்திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை விவகாரம் குறித்து தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் சாலை விபத்தின் போது அவரின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தனிப்படை காவல் துறையினர் தனபால், உறவினர் ரமேஷை கடந்த 25ஆம் தேதி சேலத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி , நீலகிரி - கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
கூடுதல் காவல் விசாரணைக்கு அனுமதி
இந்நிலையில், ரமேஷிற்கும் 5 நாள்கள் விசாரணை முடிந்த நிலையில் இன்று (நவ.02) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது, தனிப்படை காவல் துறையினர், கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம், கனகராஜ் சாலை விபத்தில் இறந்தது தொடர்பான சாட்சியை அழித்தது தொடர்பாக கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காகவும், செல்போனில் அவர் தொடர்புகொண்ட விவரங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளதாலும் ரமேஷை வைத்து விசாரிக்க 7 நாள்கள் கூடுதல் விசாரணைக்கு அனுமதி கோரினர்.
வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், ரமேஷை மேலும் 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
விசாரணை முடித்து 6ஆம் தேதி மாலை 4 மணிக்குள் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பின்னர் ரமேஷை தனிப்படை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பள்ளி வருகை பதிவேட்டில் சாதி? - சென்னை மாநகராட்சி விளக்கம்