வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 11 சிங்கங்களின் ரத்த மற்றும் சளி மாதிரிகள் அண்மையில் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியானது. இதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கடந்த 3ம் தேதி உயிரிழந்தது.
இந்நிலையில், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டு முறையாக கரோனா தொற்று விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. இதற்கிடையே, நீலகிரி மாவட்டம், உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், ”முதுமலை மற்றும் டாப்சிலிப் முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அங்கு மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.