நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பணியர் உட்பட ஏழு விதமான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், இதுநாள் வரை பழங்குடியின மக்களுக்குப் பெரிய அளவில், கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
இந்நிலையில் கூடலூர் அருகே சோலாடி பழங்குடியினர் கிராமத்தில் அண்மையில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று வேளை சுகாதாரமான உணவு, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக பழங்குடியினர் கிராமத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ’புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி’ - திருமாவளவன் குற்றச்சாட்டு