குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இக்கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக முறையான சாலை வசதி, பேருந்து வசதி இல்லாமல் மருத்துவமனை, பள்ளி, அலுவலகத்திற்கு செல்ல தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.
அப்படி இரவு நேரங்களில் செல்லும்போது கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானைகள் போன்ற வனவிலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே இரவு நேரங்களில் சாலையை கடக்க வேண்டியுள்ளது.
நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்களின் அவசர சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தியை அழைத்தால் இப்பகுதிக்கு வர மறுக்கின்றனர். நோயாளிகளை தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையுள்ளது.
தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குகள் சேகரிப்பதற்காக எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரூராட்சிக்கும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை-விடுத்துள்ளனர்.