நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதி நாள்தோறும் பரபரப்பாகக் காணப்படும் இடம். இந்தப் பகுதியில் பள்ளி, கோயில்கள் உள்ளன. இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென்று இன்று டாஸ்மாக் கடை திறந்து மதுபானங்கள் இறக்கி விற்பனை செய்யப்பட்டன. இதனால் குடிமகன்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கடையை முற்றுகையிட்டு ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்குவந்த காவல் துறையினர், வட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களே மதுக்கடைக்கும் பள்ளி இருக்கும் பகுதிக்கும் இடையே அளவீடு செய்ததில் 100 மீட்டா் அளவே உள்ளது எனத் தெரியவந்தது.
இதனால் பொதுமக்கள் மீண்டும் கொந்தளிப்பு அடைந்து கடையை எடுக்கவில்லை என்றால் அதேப் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு காவல் துறை, அலுவலர்களிடம் பொதுமக்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் கடையை தற்காலிகமாக மூட அலுவலர்கள் உத்தரவிவிட்டதால் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.