நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஆறுகளில் துார்வாரும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. இதில், 8000 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது. ஆறுகளில் மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்க ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கான திறப்பு விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வருகை தந்தார். அப்போது அடிப்படை வசதிகள் கோரியும், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் ஒரு தரப்பினர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்ததையையடுத்து, திட்ட விழா நிறைவு பெறும் வரை காத்திருந்த மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.