நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு (இண்ட்கோ) சார்பில் தேயிலை விவசாயிகள் நலன் - வர்த்தக மேம்பாட்டுக்கு இண்ட்கோ ஆப், ஊட்டி ஆப் என இரு செயலிகள் இன்ட்கோ சர்வ் அலுவலகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
இதில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் டாக்டர் சிந்தாலா தலைமை வகித்து அரசு திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் புதிய செயலிகளை இண்ட்கோ சர்வ முதன்மை செயலரும், தலைமைச் செயல் அலுவலருமான சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தொடங்கிவைத்து பேசினர்.
இந்த புதிய செயலிகள் மூலம் விவசாயிகளின் அன்றாட பரிவர்த்தனை உள்பட அனைத்தும் அறிந்துகொள்ளவும் தேயிலை தொழில் மேம்பாட்டிற்கும் செயல்படும் இண்ட்கோ செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஊட்டி செயலி மூலம், நியாய விலை கடைகளில் ஊட்டி தேநீர் விற்பனை விவரங்கள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகளில் ஊட்டி தேநீர் விற்பனை விவரம் உடனுக்குடன் கிடைக்கவும், வர்த்தக விவரங்களில் முறைகேடுகள் நடக்காமல் வெளிப்படை தன்மையுடன் இருக்க வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.