நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
உழவர் சந்தை சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால், அனைத்து வாகனங்களும் உப்பசி திருப்பி விடப்பட்டன. உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேசிபி மூலம் சாலையை சீரமைக்கும் பணியில் தொடங்கப்பட்டது.
சாலை விரைவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. மேலும் குன்னூரில் நீர்பிடிப்பு பகுதிகளான ரேலியா, ஜிம்கானா அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.
மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளுக்கு இம்மழை ஏதுவாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.