நீலகிரி: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருவதால், நீலகிரி வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனால் பலா, மாங்காய் போன்றவை பழுத்து உள்ளதால், அவைகளை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து யானை கூட்டம் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றன.
இந்நிலையில், கெத்தை பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குட்டியுடன் கூடிய ஐந்து காட்டு யானைகள், சேலாஸ் பகுதியில் முகாமிட்டுள்ளது. யானைகள் சாலைக்கு வராதபடி குன்னூர் மற்றும் குந்தா வனத்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒலிபெருக்கி மற்றும் தீ மூட்டி, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், வாகன ஓட்டிகளுக்கு யானைகளைக் கண்டவுடன் வாகனத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடாது என்றும், அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். யானைகளைக் கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், யானைகளை உள்ளூர்வாசிகளும், பொதுமக்களும் விரட்ட முற்படுவதும், துன்புறுத்தக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
விரைவில் காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே போன்று குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், ஐந்து யானைகள் மரப்பாலம் கேஎன்ஆர் பகுதியில் வலம் வருவதால், அப்பகுதியிலும் வனத்துறை கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்