நீலகிரி மாவட்டம் உதகை அரசுக் கலைக் கல்லூரியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது. இதில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு தலைமை வகித்தார்.
அப்போது பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றப்படாத வகையில் அனைத்துப் பொருள்களும் சரியான எடை அளவுடனும், சரியான விலையில் விற்கப்படுதை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிசெய்ய வேண்டும்" எனக் கூறினார்.
மேலும், "வட கிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போல் தரமான பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்கும் மாவட்டம் நீலகிரி என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உற்பத்திசெய்யப்படும் தேயிலை உள்பட பல்வேறு பொருள்களில் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில் தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். முன்னதாக நுகர்வோர் உரிமைகள் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: