மலை மாவட்டமான, நீலகிரியில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. யானைகளுக்கு பலாப்பழம் பிடிக்கும் என்பதால் அதனைத் தேடி யானைக் கூட்டம் தற்போது குன்னூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கொலக்கம்பை போன்ற பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நேற்று முன் தினம் பலாப்பழம் தேடி கொலக்கம்பை கிராமத்திற்கு வந்த ஒற்றை மக்னா யானை, வழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது. அப்போது, நடந்து சென்ற ஒருவரை தாக்குவது போல் வந்து பின்னர் அவர் மீது எவ்வித தாக்குதலும் நடத்தாமல் சென்றது. இந்த காட்சி கொலக்கம்பை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. தற்போது இந்த காட்சி வைரலாகிவருகிறது.