குன்னூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ், அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் ஆங்காங்கே சாதாரணமாக மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன. அவற்றை விரட்ட முற்பட்டால் அவ்வப்போது மனிதர்களைத் தாக்கி வடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், "பிளாக் பிரிட்ஜ் அருகே சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமைகளை வாகனங்களில் வருபவர்கள் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது, நடந்து செல்பவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்" என்றனர்.
நீலகிரி சுற்றுச்சூழல், கலாசார சேவை அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் கூறுகையில், "வனங்களில் உள்ள தாவரங்களின் பல்லுயிர் பெருக்கம் பெரும்பாலும் குறைந்துவிட்டது. இதனால், மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. தாவர உண்ணிகள் குடியிருப்புக்களை நோக்கி வருவதால், இவற்றைத் தேடி, சிறுத்தை போன்றவையும் நகர் பகுதிக்கு வருகின்றன” என்றார்.
இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.