நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள நகராட்சியில் 30 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக இங்கு பணிபுரியும் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சீரான முறையில் சம்பளம் வழங்குவதில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மாத சம்பளத்திற்கு போதுமான நிதி இல்லாததால் காலதாமதம் செய்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நகராட்சி முடிவெடுத்ததையடுத்து துப்புரவுத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாதந்தோறும் பணி செய்பவர்களுக்கு மாத கடைசியில் வழங்க வேண்டிய சம்பளத்தை தராமல் 18 நாட்களுக்கு பிறகு வழங்குவதாக தெரிவிப்பதால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நகராட்சி அலுவலர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து முறையாக சம்பளம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.