நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகேயுள்ள தூதூர்மட்டம் கிராமத்த்தில் காட்டெருமை நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் ஆகியவற்றை தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வப்போது, மனித விலங்கு மோதல்கள் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் வாழப்பாடியிலிருந்து 10 சுற்றுலா பயணிகள் ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். குன்னுார் அருகேயுள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை மஞ்சக்கம்பை கோவிலுக்கு செல்ல குடும்பத்தினருடன் தேயிலை தோட்டத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒற்றை காட்டெருமை அவ்வழியாக வந்த சுற்றுலாப்பயணிகள் 10 பேரையும் துரத்தியது. இதில், சேலம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி தனலஷ்மி(28) அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் பிரியங்கா தம்பதியினரின் மகள் ஸ்ருதிகா(வயது 12) ஆகிய இருவரை தாக்கியது.
இதில் தனலஷ்மிக்கு காலில் காயம் ஏற்பட்டது. சிறுமி ஸ்ருதிகாவுக்கு கழுத்து பகுதியிலும் வயிற்று பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் காட்டெருமையை விரட்டி, படுகாயமடைந்த இருவரையும் மீட்டு குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொலக்கம்பை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்