நீலகிரி: கடந்த மாதம் தென்காசியில் இருந்து உதகைக்கு சுமார் 57 பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின் ஊட்டியில் இருந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மாலை தென்காசி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மாலை சுமார் 5.15 மணியளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 9வது கொண்டை ஊசி வளைவின் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
அதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த விபத்தில் தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த இளங்கோ, அவரது மகள் கெளசல்யா, ஜெயா, பேபிகலா, முருகேசன், பத்மராணி, தங்கம், நிதிஷ், கண்ணா ஆகிய 9 பேரும் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் குன்னூரில் இருந்து கடையத்திற்கு தகனம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநரின் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆர்.தியாகராஜன் நேற்று (அக்.20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தென்காசியிலிருந்து உதகைக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி தென்காசியைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து, குன்னூரை அடுத்த மரப்பாலம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். அதற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினருடன் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், விபத்திற்குள்ளான பேருந்தின் ஓட்டுனர் முத்துக்குட்டி (65) அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இயக்கியது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தென்காசி செட்டியார் கடைத் தெரு, நெட்டூர் ஆலங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குட்டியின் ஓட்டுநர் உரிமம் 18.10.2023 முதல் 17.10.2033 வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடைக்கு சீல் வைத்ததால் அதிர்ச்சியில் வியாபாரியின் மனைவி உயிரிழப்பு!