மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசனாகும். அப்போது சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகையைச் சுற்றிப் பார்க்க வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள 124ஆவது மலர்க் கண்காட்சிக்காக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சைக்கலமன், மேரிகோல்டு, பேன்சி, பிரிமுலா, ஜினியா, நிமேசியா உள்ளிட்ட 400 வகையான மலர் விதைகள் வரவழைக்கபட்டு, சுமார் 5 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மலர் நாற்றுகள் நடவுசெய்யத் தயாராக உள்ளதால் இன்று காலை முதல் அவற்றை நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்தப் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
தற்போது நடவு செய்யும் இந்த மலர் நாற்றுக்கள் நன்றாக வளர்ந்து, வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிடும். அப்போது வரும் சுற்றுலாப் பயணிகள் பல வண்ணங்களில் லட்சக்கணக்கான மலர்களைக் கண்டு ரசிக்கும் விதமாக இருக்கும்.
இதையும் படிங்க: பனியிலிருந்து மலர்களைப் பாதுகாக்க போர்த்தப்பட்ட பச்சைக் கம்பளம்!