நீலகிரி : குன்னூர் அருகே உள்ள ஜெகதளா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி கரடி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக ஜெகதளா பகுதியில் உள்ள கோயிலில் எண்ணெய் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள பழங்களை உண்ணுவதற்காக இரவு நேரங்களில் கரடி உலா வருவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஜெகதளா பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பின் கதவைத்தட்டும் வீடியோ அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ பதிவு குடியிருப்புவாசிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது சமூக வலைதளங்களில் இதுகுறித்தான காட்சிகள் வைரலாகி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் படிங்க: Watch: கால்பந்து ஆடும் யானை குட்டி!