நீலகிரி: உதகை அருகே உல்லத்தி ஊராட்சியில் கடசோலை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒரு தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று (நவ.17) அதிகாலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று, பள்ளி வகுப்பறை கதவை உடைத்து வகுப்புக்குள் நுழைந்துள்ளது.
உணவு தேடிவந்த கரடி அங்கிருந்த இரண்டு பீரோ, ஆசிரியர், மாணவர்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும் புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது. உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்று மறைந்தது.
இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் அளித்த புகார் அடிப்படையில் பள்ளி வளாகத்தைச் சுற்றி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இந்தப் பள்ளியில் கரடி அட்டகாசம் செய்து வருவதால் கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், பள்ளிக்கு குழந்தைகள் அனுப்பாமல் மாற்றுப் பள்ளியில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மினியேச்சர் குறிஞ்சி மலர்கள்