நீலகிரி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் தயாராகி வரும் நிலையில் வெடி விபத்து இல்லாமல் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவது குறித்து உதகையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உதகை தீயணைப்புத்துறை சார்பாக சற்று வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் ஊசி பட்டாசு, ராக்கெட், ஆட்டோ பாம், மத்தாப்பு, பூத்தொட்டி உள்ளிட்ட பட்டாசுகளை போன்று வேடம் அணிந்தவாறு கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் மாணவர்களுடன் நடனமாடிவாறு பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும், எவ்வாறு வெடிக்கக் கூடாது, கால்நடைகளின் வால் பகுதியில் பட்டாசுகளை கட்டி வெடிக்க செய்யக்கூடாது என்பது உள்ளிட்டப் பல்வேறு செயல்முறை விளக்கத்தை நகைச்சுவையாக செய்து காண்பித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினரின் புது வித விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இதையும் படிங்க:திராவகம் கலந்த குளிர்பானத்தால் சிறுவன் உயிரிழப்பு - சிபிசிஐடிக்குக்கு மாற்றம்