ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தாயை இழந்து காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த மூன்று மாத பெண் யானைக் கன்றை வனத்துறையினர் மீட்டனர். அந்த யானையை சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் சென்று, ’அம்முக்குட்டி’ எனப் பெயரிட்டனர். அங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் யானையைப் பரிசோதித்து, தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து யானையை பராமரித்துவந்தனர்.
யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு சென்று பராமரிக்கப்படவுள்ளதாக வனத் துறையினர் கூறி வந்த நிலையில், திடீரென வனத் துறையினர் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் குட்டி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டதற்கு வனஉயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் குட்டி யானையை கடந்த 20 நாட்களாக வனப்பகுதிக்குள் வைத்து தாயுடன் சேர்க்கும் முயற்சி நடந்து வந்த நிலையில் வனத்துறையினரின் இந்த முயற்சி தோல்வியில் முந்தது. இதையடுத்து வனத்துறை உயர் அலுவலர்கள் உத்திரவின் அம்முகுட்டியை முகாமில் வைத்துப் பராமரிக்க முடிவு எடுத்தனர்.
அதன்படி சத்தியமங்கலத்திலிருந்து வனத்துறை வாகனம் மூலம் குட்டியானை நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. வனத்துறை மருத்துவ குழுவினர் யானை குட்டியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர். குட்டி யானைகளை பராமரிக்க ஏற்கனவே தயார் நிலையில் உள்ள கராலுக்கு(கூண்டு) சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் சத்தியமங்கலம் வனத்துறையினர், முதுமலை வனத்துறையினரிடம் ஆம்முகுட்டியை ஒப்படைத்தனர். சத்தியமங்கலத்தில் வேட்டைதடுப்பு காவலர்களை பிரிய மனமில்லாமல் சத்தம் போட்டு கொண்டே உள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் குட்டி யானையை பராமரித்த 3 வேட்டை தடுப்பு காவலர்கள் சில நாட்கள் குட்டியுடன் இருப்பார்கள் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓசூரில் இருந்து பிடித்து வரப்பட்ட குட்டி யானை ரகுவை பராமரித்து வரும் பாகன் பொம்மன் இந்த யானையையும் பராமரிப்பார் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க:
அம்முகுட்டியை பத்திரமாக கவனித்து கொள்வோம்! - வனத் துறை அலுவலர்கள் உறுதி