குன்னூர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சார்பில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
தனியார் மூலம் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்கள் தரமானதாக இருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ்கள் பெரும்பாலும் சமவெளியில் ஓடி தேய்ந்த பிறகே மலைப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், மலைப்பகுதியில் ஓடும்போது 108 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், இன்று குன்னூரில் இருந்து திருமூர்த்தி என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பயணத்தின்போது, திடீரென ஆம்புலன்ஸின் ஆக்ஸிலேட்டர் உடைத்துள்ளது. இதனைக் கவனித்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் ஆம்புலன்ஸை சாமர்த்தியமாக கட்டுக்குள் கொண்டு வந்தார்.
பின்னர், மாற்று ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த மாற்று ஆம்புலன்ஸில் நோயாளி அனுப்பி வைக்கப்பட்டார். இதுபோன்று, ஆம்புலன்ஸ்களில் ஏற்படும் கோளாறுகளால் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, புதிய தரமான ஆம்புலன்ஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.