நீலகிரி: ஏழு ஆண்டிற்கு முன் இறந்தவருக்கு அதிமுக இலக்கிய அணியின் தலைவர் பதவி வழங்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிலும் சார்பு அமைப்புகளிலும், புதிய நிர்வாகிகள் தலைமை மூலம் நியமிக்கப்பட்டனர். சில நிர்வாகிகளின் பொறுப்பு மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
மேலும் ஊட்டி, குந்தா, கூடலூர் ஆகிய அதிமுக ஒன்றியங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு; அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் தங்களுக்குப் பதவி வழங்கவில்லை எனவும்; சமீபத்தில் அமமுக கட்சியிலிருந்து சோ்ந்த சிலருக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டது எனவும் கட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை வலியுறுத்தி கோத்தகிரியில் அதிமுக சார்பில் டானிங்டன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இச்சூழலில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரான மேல்குந்தாவைச் சேர்ந்த திப்ப வாத்தியார் என்பவருக்கு தற்போது இலக்கிய அணியின் தலைவர் பதவி வழங்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.