நீலகிரி: பெருமழை காலம், குளிர், பனி என அனைத்து நேரங்களிலும் இரவு, பகல் பாராமல் தங்களுடைய பணியைத் திறம்படச் செய்து மக்களுக்குச் சேவை செய்துவருபவர்கள் தீயணைப்புத் துறையினர். வழக்கமாக, தமிழ்நாட்டின் சமதள பரப்பில் உள்ள தீயணைப்புத் துறையினர் மழை, தீ விபத்து என அவ்வப்போது ஏற்படும் பேரிடரின்போதுதான் அதிகமான பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.
ஆனால், மலைப் பிரதேசங்களில் உள்ள தீயணைப்புத் துறையினரோ, எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். காற்று, மழை என வந்தால் மரம் விழும் இடங்கள், மண் சரிவு ஏற்படும் இடங்களுக்கு உடனடியாகச் செல்ல வேண்டும். அவ்வாறு, சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று மக்கள் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்க வந்தால், அவர்கள் ஓய்வெடுக்க ஒரு நல்ல ஓய்வறை, கழிப்பறை ஆகியவை இல்லாமல் அவதிப்படும் நிலையில் நீலகிரி தீயணைப்புத் துறையினர் உள்ளனர்.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ள இடர், ஆற்று வெள்ளம், மரங்கள் விழுதல், சாலை பாதிப்பு போன்ற பேரிடர் காலங்களில் விரைவாகப் பணியாற்றி பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
இதில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, குன்னூர் நஞ்சப்பா சத்திரத்தில், முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 14 பேர் சென்ற எம்ஐ-17வி5 என்னும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தின்போது, குன்னூர் தீயணைப்புத் துறையினர் அதிரடியாகச் செயல்பட்டு சம்பவ இடத்தில் கிராம மக்கள் உதவியுடன், ஹெலிகாப்டரிலிருந்த மூன்று பேரை உயிரோடு மீட்டனர். மீதமிருந்த 11 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
பின்னர், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இருவர் உயிரிழந்தனர். மேலும், வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டார். அவரும், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
40 ஆண்டுகால அவதி
இந்த விபத்து மட்டுமின்றி எண்ணற்ற சம்பவங்களில், இவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினர். இவர்களின் சேவையைப் பாராட்டி இந்திய ராணுவம், விமானப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு நன்றி பாராட்டினர். இருப்பினும், அவர்களுக்கான ஓய்வறை, கழிவறை, அலுவலகம் போன்றவை சுமார் 40 ஆண்டு காலமாக முறையான பராமரிப்பின்றி உள்ளது.
மழைக் காலங்களில் ஒழுகும் அறையில் ஓய்வெடுக்க முடியாமலும், அசுத்தமான கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமலும் இருக்கும் அவலத்தில் அவர்கள் தவித்துவருகின்றனர். மேலும், அவசர காலங்களிலும் கனரக வாகனங்களை முறையாக இயக்க முடியாதது என இதுபோன்ற சூழலில் குன்னூர் தீயணைப்புத் துறையினர் தங்கள் பணியைத் திறம்படச் செய்துவருகின்றனர்.
தற்போது ஏற்பட்ட இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உதவிபுரிந்த நஞ்சப்பா கிராம மக்களுக்கு அரசு சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அப்பகுதி மேம்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று, குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு நிலையான அலுவலக கட்டடம், ஓய்வறை, சுகாதாரமான கழப்பறை, மின்விளக்கு போன்ற வசதிகளை அமைத்துத் தர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மரணத்தை பலமுறை தோற்கடித்த வருண் சிங் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்