நீலகிரி: குன்னூர் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
அப்படி குடியிருப்பு அருகே வலம் வரும் சிறுத்தை, வீட்டின் அருகில் உள்ள நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை பிடித்துச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் சம்பத் என்பவர், தனது வளர்ப்பு நாயை சிறுத்தை இரவு நேரத்தில் கவ்விச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.
அப்போது நாயின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்ததாகவும், நாயை வாயில் கவ்விக் கொண்டு சிறுத்தை அங்கிருந்து சென்றதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் தனியாக செல்வதற்கு அச்சம் கொள்கின்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் வந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு அப்பகுதியில் வனத்துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் மேலும் தொடரும் பட்சத்தில் இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் இப்பகுதியில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்து வருகின்றனர். இது குறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், "எங்கள் வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கிச் செல்வதை நாங்கள் விட்டின் உள்ளே இருந்து பார்த்தோம். இது சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள், வேலைக்குச் செல்லுவோர் என அதிகளவில் இருக்கின்றனர். ஆகையால் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
முன்னதாக கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புலிகள் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் குட்டிகள் உள்பட 10 புலிகள் வரை உயிரிழந்து இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகளின் இறப்பு குறித்து கண்டறிய தனிக் குழு அமைத்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.