நீலகிரி: குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர்.
கடின பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 311 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய எடுக்கப்படும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று(நவ.13) நடந்தது. பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரியாதையை ராணுவ வாகனத்தில் வந்த எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் ஐந்து சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள், கேடயத்தை கமாண்டன்ட் வழங்கி கெளரவித்தார். கரோனா சூழ்நிலையிலும் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஓதுவது ஒழியேல்; வாசிப்பை ஊக்குவிக்கும் சுவரோவியங்கள்!