நீலகிரி மாவட்டத்தில் உள்ள எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது, பெள்ளட்டிமட்டம் எஸ்டேட். இப்பகுதியில் பிரமாண்ட கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் கனமழையின் காரணமாக இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இங்கு பொதுவாகவே பகலில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பணியாற்றி வருவர். நள்ளிரவில் விழுந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தப் பகுதியை தாசில்தார் சீனிவாசன் உட்பட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பொக்லைன் மூலம் மண் சரிவுகள் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ள நிலையில், பெரும்பாலானோர் அதை பின்பற்றுவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற விதி மீறி கட்டப்பட்ட கட்டுமான பணியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.